சென்னை: தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக.11 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 1,56,278 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவ.17ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில் பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்.15 ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 14 ஆயிரத்து 524 பேரில் 13,893 பேர் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்தனர். அவர்களில் 12,996 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரையில் 2 ஆம் சுற்றுக் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் 18,521 பேருக்கு கல்லூரியில் சேர்ந்துள்ளனர். 3 ஆம் சுற்றுக் கலந்தாய்வு 13 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்விற்கு தரவரிசைப் பட்டியலில் 45 ஆயிரத்து 578 முதல் 94 ஆயிரத்து 620 வரை பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம். இந்தச்சுற்றில் 49 ஆயிரத்து 43 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். அவர்களில் 28,020 பேர் கல்லூரியில் சேர அனுமதிக்கப்பட்டனர்.