சென்னை: கன்வர்லால் குழுமத்திற்குச் சொந்தமான மருந்து மற்றும் ரசாயன நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரினை அடுத்து, கன்வர்லால் குழுமத்திற்குத் தொடர்புடைய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஐந்து நாட்களாக அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கன்வர்லால் குழுமத்தின் நிர்வாகிகள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சென்னையில் மருந்து தயாரிக்கக் கூடிய நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இதில் காவ்மன் பார்மா என்ற நிறுவனம் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்து பொருட்களை உற்பத்தி செய்து சீனா, தைவான், இஸ்ரேல் போன்ற பல நாடுகளுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்தும், சப்ளை செய்தும் வருகின்றது. இந்த தொழிற்சாலை கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் நிலையில், தொழிற்பேட்டையில் இருக்கக்கூடிய குடோனில், பத்திற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.