சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் பணியில் உள்ளது. இதுகுறித்து ஏதாவது புகார் இருப்பின் 1913 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளம் உள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்கள் மற்றும் சாலை மையத் தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன.
சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (பகுதி அளவு) ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய சென்னை என்விரோ என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 15 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலம் தூய்மை பணிகள் செய்யப்பட்டன.
தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் (பகுதி அளவு) மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 16 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலமும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் சார்பில் 47 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் என மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 கி.மீ அளவிற்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் இந்த மாதம் 15ஆம் தேதி வரை இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் 333 இடங்களில் உள்ள மணல் மற்றும் தூசிகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் மணல் மற்றும் தூசிகள் அதிகளவில் காணப்பட்டால், மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார் அளிக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் கே.என். நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? - ஜெயக்குமார்