சென்னை:இந்திய விஞ்ஞானிகளை இழிவுபடுத்திய வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய பல மொழிகளில் நடித்து வருகிறார். Web series கதைகளிலும் தற்போது நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் பாஜக குறித்து பல்வேறு எதிர்ப்பு கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார். இதனால் சர்ச்சைகளிலும் தொடர்ந்து சிக்கி வருகிறார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் விக்ரம் லேண்டரில் இருந்து பெறப்பட்ட முதல் புகைப்படம் என்ற பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற கேலிச் சித்திரத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு அரசியல் பிரமுகர்கள் உள்படப் பலரும் தங்களது கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தற்போது இஸ்ரோ குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கார்டூன் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான்-3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட அந்த படம் சமூக வலைத்தளங்களில் பல எதிர்ப்பை கிளம்பி உள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தைக் கிண்டல் செய்து கார்ட்டுன் வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு, கர்நாடகாவில் உள்ள காவல் நிலையங்களில் புகார் குவிந்து வருகிறது.
அதைபோல சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேசு நாடார் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். "இந்திய விஞ்ஞானிகளையும் இந்திய மக்களையும் இந்தியத் தேசத்தையும் அவமானப்படுத்தும் விதமாக பிரகாஷ்ராஜ் அவர்கள் விண்கலம் படம் எடுத்து அனுப்பியவற்றைக் கிண்டல் செய்யும் விதமாகவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவனை இழிவுபடுத்தும் விதமாகவும் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார். அவர் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேசு நாடார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பகால்கோட் மாவட்ட காவல்துறையினரும் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் காண இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!