சென்னை:சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்த திருஞான சம்மந்தம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு (பிப்.6) சென்னை விமான நிலையத்தில் இருந்து மவுலிவாக்கம் செல்வதற்கு, ஓலா வாடகை காரை புக்கிங் செய்தார்.
காரை திண்டிவனம் புதூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு ஓட்டிச்சென்றார். அப்போது, திருஞான சம்மந்தம் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கார் சிறிது தூரம் சென்ற பின், ஏடிஎம்-மில் நிறுத்துமாறு ஓட்டுநர் திருநாவுக்கரசுவிடம், திருஞான சம்மந்தம் கூறியுள்ளார்.
பின்னர் மீண்டும் கார் புறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த இடங்களில் காரை நிறுத்துமாறு சம்மந்தம் கூறியுள்ளார். அதற்கு ஓட்டுநர் திருநாவுக்கரசு மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், நந்தம்பாக்கம் பகுதியில் காரை நிறுத்திய ஓட்டுநர் திருநாவுக்கரசு, திருஞான சம்மந்தத்தை கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்ததால், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருஞான சம்மந்தம் ஆளுநரின் தனிப்பட்ட ஆலோசகர் என்பது தெரியவந்ததால், அவரை சமாதானம் செய்த காவல்துறையினர் வேறு காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கார் ஓட்டுநர் திருநாவுக்கரசு அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தேர்வாகிய காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணை