சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53வது பிறந்த நாள் விழா நாடெங்கும் உள்ள அக்கட்சியினரால் கடந்த ஜூன் 20ஆம் தேதி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் (Congress MP Vijay Vasanth) இவ்விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்த்திப் பேசிய அவர், 'நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை அவருக்கு முன்னதாகவே இருந்ததாகவும், அதனை இவ்வாறு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விஜயை இணைக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்திருந்தார். மேலும், இதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்' அவர் கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவரின் இந்த கருத்துக்கு அவரை ஆபாசமாக திட்டி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட பாஜகவை சேர்ந்த பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவின் தலைவர் ஹேம்நாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 23) புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரவியம், 'காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் வசந்த், முகநூலில் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என பதிவிட்டிருந்ததாகவும், அதற்கு பாஜகவை சேர்ந்த சுரேஷ் என்பவர் எம்.பி விஜய் வசந்தை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி கருத்து பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். எம்.பி விஜய் வசந்த்தை அவதூறாக பேசிய அந்த நபர் மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டுமென' கோரிக்கை வைத்துள்ளார்.
இதேபோல 'எம்.பி விஜய் வசந்த்தை கீழ்த்தரமாக, அவரின் தாயை பற்றி ஆபாசமாக பேசிய பாஜகவை சேர்ந்த சுரேஷ் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. குஷ்பு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறினால் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுசெயலாளர் ராமலிங்க ஜோதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.