தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் திருடிய பைக்...கடலூரில் பெயர் மாற்றம்; நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது புகார்

சென்னையில் திருடப்பட்ட இருசக்கர வாகனம், கடலூரில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேறொரு நபருக்கு பெயர் மாற்றப்பட்டதால் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டதாரி இளைஞர் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது புகார்
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது புகார்

By

Published : Oct 27, 2022, 7:46 PM IST

சென்னை:சைதாப்பேட்டை சடையப்பன் தெருவைச்சேர்ந்தவர், அமுதராஜ்(23), பொறியியல் பட்டதாரியான இவர் தனது படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை தேடி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு குமரன் நகர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளோடு அமுதராஜ் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குமரன் நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை எடுப்பதற்காக ஆன்லைனில் சோதனை செய்துள்ளார்.

அப்போது இவரது இரு சக்கர வாகனம் அமீர் அப்பாஸ் என்ற பெயருக்கு மாறி இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அமுதாராஜ் கே.கே.நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குச்சென்று அலுவலர்களிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அமுதராஜின் இருசக்கர வாகனம் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெயர் மாற்றப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர், அமுதராஜ் மீண்டும் குமரன் நகர் காவல் நிலையத்திற்குச்சென்று தனது கையெழுத்து இல்லாமலேயே ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தனது இருசக்கர வாகனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தை மீட்டுத்தருமாறும் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெயர் மாற்றப்பட்ட இருசக்கர வாகனம்

ஆனால், குமரன் நகர் காவல் நிலையத்தில் இந்தப்புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அமுதராஜை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகள், இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள், பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் என அனைத்தையும் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்தபிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் குமரன் நகர் காவல் துறையினர், கடலூர் ஆர்.டி.ஓ அலுவலக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் தனது இரு சக்கர வாகனத்தை மீட்டு தரக்கோரியும் அமுதராஜ் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமுதராஜ் கூறுகையில், 'தனது இரு சக்கர வாகனத்தின் பதிவை தனது கையெழுத்து இல்லாமலேயே வேறொருவர் பெயருக்கு மாற்றியுள்ளனர். ஒரு வாகனத்தின் உரிமையாளர் இல்லாமல் வேறொரு நபருக்கு ஆர்.டி.ஓ அலுவலர்கள் எப்படி மாற்றம் செய்து கொடுத்தார்கள்?. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடலூர் ஆர்.டி.ஓ அலுவலக அலுவலர்களுக்கு கால் செய்து கேட்டபோது அலட்சியமாக, மிரட்டும் தொனியில் பதில் அளிக்கின்றனர்.

அனைத்து ஆவணங்களையும் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த பிறகும் காவல்துறையினர் தினம்தோறும் காவல் நிலையம் வரச்சொல்லி அலைக்கழித்து மரியாதை குறைவாக நடத்தினர். இதன் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இன்டர்வியூக்கு செல்ல முடியவில்லை. தனது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது புகார்

எனவே, குமரன் நகர் காவல்துறையினர் மற்றும் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனது இருசக்கர வாகனத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகத்தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பைக் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பல்சர் வாகனம் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details