சென்னை: வடபழனியில் உள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலையில் இளைஞர் ஒருவருக்கு அளித்த தவறான சிகிச்சையால் அவரின் காலை உடலிலிருந்து அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வடபழனியிலுள்ள புத்தூர்கட்டு வைத்தியசாலை மீது புகார்கள் குவிந்து வருகின்றன.
சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜய். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் பார்க்கில் தனது குழந்தையை விளையாட அழைத்து சென்றபோது, தவறி கீழே விழுந்ததில் விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விஜயை அழைத்து சென்றநிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்போட வேண்டும் என அங்கு கூறப்பட்டதாக தெரியவருகிறது.
பின்னர் நண்பரின் மூலமாக வடபழனியில் உள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு சென்ற விஜய்-க்கு, 4 கட்டுக்கள் போட்டால் சரியாகிவிடும் என வைத்தியசாலையில் தெரிவித்ததை நம்பி பணம் அளித்து கட்டுப்போட்டு சென்றுள்ளார். பின்னர், நண்பர் ஒருவரின் உதவியோடு வடபழனியிலுள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு சென்ற விஜயிடம், அங்கிருந்தவர்கள் 4 கட்டுகள் போட்டால் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர், முதலாவதாக கட்டுப்போட்டுக் கொண்டார்.
இதனிடையே இரண்டாம் முறை கட்டுப்போட்ட பிறகு விஜய்-க்கு தொடர்ந்து காலில் ரத்தம் கசிந்ததால், அச்சமடைந்து வைத்தியசாலையின் உரிமையாளர் சிவசாமி வேலுமணியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதற்கு அவர், அட்மிட் ஆகி சிகிச்சை பெறுமாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒரு மாதத்திற்கு மேலான போது, விஜயின் எழும்பு முறிவு குணமடையாமல் மேலும் வலியை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனால், செய்வதறியாத அவரின் குடும்பத்தினர் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயின் கால் அழுகிய நிலையிலிருப்பதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், உடனே காலை உடம்பிலிருந்து அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து விஜயின் கால் அகற்றப்பட்டது.