ஈரோடு:சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தினேஷ், கல்யாணசுந்தரம், முத்துகுமார் உள்ளிட்ட 4 பேர் காரில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கம்பிகளுக்கிடையே கார் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நால்வரும் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர்:பள்ளிகொண்டா அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் ரங்கசாமி வயது (55) மற்றும் ஊனை பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக்கும் ஆரமுதன் (13) என்ற மாணவன் ஆகியோர் சாலையோரம் நின்றிருந்த போது, பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த தனியார் ஹோட்டல் உரிமையாளர் குமரவேலின் கார் மோதியதில், ரங்கசாமி மற்றும் பள்ளி மாணவர் ஆரமுதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிகொண்டா காவல் நிலைய போலீசார் குமரவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரி மாதவன் (23). இவர் குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனது நண்பரின் அறையில் தங்கி வேலை தேடியுள்ளார். இந்த நிலையில் (ஜூலை 18) காலை மாதவன் தான் தங்கிருந்த அறைக்கு அருகே இருந்த மின் அழுத்த கம்பியில் ஆடை விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார், மாதவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.