சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'மருத்துவமனைகளை, மருத்துவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியும் மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் இளநிலை மருத்துவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மேற்கு வங்க அரசை கண்டித்தும் இன்று காலை ஆறு மணி முதல் நாளை காலை ஆறு மணிவரை இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் நடைபெற்றுவரும், நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவர்களுக்கு உள்ள உரிமையை மம்தா பானர்ஜி கொச்சைப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. குறிப்பாக, மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கான மிக முக்கியக் காரணம், அரசு மருத்துவமனைகளின் மோசமான செயல்பாடும், பொது சுகாதாரத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்ததும்தான்.