கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள கல்லூரிகள், அதன் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள் ஆகியவற்றில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
ஆன்லைனில் தேர்வினை நடத்த மென்பொருள் வடிவமைப்பிற்கான ஒப்பந்தத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் தனியார் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. தற்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதற்கான பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.
இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகம் உள்ள சூழலில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 28) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை நடத்த தடையில்லை என தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்த தயாராக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின் படி தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் STUCOR என்ற ஆப் மூலம் கால அட்டவணை, தேர்வுகள் நடத்தப்படும் முறை ஆகியவை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை தங்களுடன் படிக்கும் பிற மாணவர்களுக்கு தெரிவிக்கும்படியும் அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண் - அண்ணா பல்கலைக்கழகம்