சென்னை:வேளச்சேரியில் இயங்கி வரும் குருநானக் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலின் போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக குற்றச்சாட்டு கிளம்பியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
கிண்டி, வேளச்சேரி சாலையில் குருநானக் கல்லூரியில் மயிலாப்பூரைச் சேர்ந்த தனுஷ் என்பவர் 3-ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வந்துள்ளார். ஆகஸ்டு 18-ஆம் தேதி தாவரவியல் படிக்கும் மாணவர்கள் கானா பாட்டு பாடியதாகவும், அதனை தனுஷ் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தாவரவியல் பிரிவு மாணவர்கள், தனுசை தாக்கியதாக தெரிகிறது.
ஆகஸ்டு 23-ஆம் தேதி கல்லூரிக்கு வந்த தனுஷ், தன்னை தாக்கிய தாவரவியல் பிரிவு மாணவர்களை நோக்கி 2 பட்டாசுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து கிண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மாணவர்களிடையே நடந்த மோதலில் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசை பயன்படுத்தியதாகவும், அங்கு கத்தி எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் சென்னை காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான மாணவர் உள்பட மோதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 18 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த மோதல் தொடர்பாக 12 மாணவர்கள் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 3 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.