சென்னை:சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் போதைப் பொருள் உட்கொண்டதால் கல்லூரி மாணவி இறந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் சாம் யுவராஜ்(52). இவருக்கு பிரியா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். பிரியா சென்னையில் உள்ள குயின் மேரீஸ் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த மாதம் 5ஆம் தேதி பிரியாவிற்கு வலிப்பு ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரியா கடந்த மாதம் 22ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் கடந்த 23ஆம் தேதி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி திருமங்கலம் காவல் நிலையத்தில் அவரது தந்தை சாம் யுவராஜ் புகார் அளித்துள்ளார். அதில் 'தனது மகள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற போது, பிரியா தன்னுடன் பயிலும் மாணவி ஒருவர் தனக்கு விஷத்தன்மை கொண்ட மாத்திரை கொடுத்த பின்பே தலைசுற்றல், சோர்வு போன்ற பிரச்னைகள் வந்ததாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் தனது மகளுக்கு இதற்கு முன்பு எந்த விதமான உடல் நலப்பிரச்னையும் இருந்தது கிடையாது. மேலும் உடல் அடக்கம் செய்யும்போது தனது மகளின் தோழி ஒருவரும் விஷத்தன்மை கொண்ட மாத்திரையைப் பிரியாவிற்கு மாணவி ஒருவர் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனால் தனது மகளின் மரணத்திற்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீதும், மாத்திரை கொடுத்த மாணவி மீதும் நடவடிக்கை எடுங்கள்’ எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.