பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக சென்னையில் கல்லூரி மாணவிகள் சாலையில் வைத்து சண்டை போட்டுக்கொண்டனர் சென்னை: கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 23 இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் காப்பீட்டு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி தன்னுடைய அவசர தேவைக்காகத் தனது நிறுவனத்தின் மேலாளரிடம் 3000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
மேலாளர் ஜிபே மூலம் மாணவிக்குப் பணம் அனுப்பிய போது பணம் செல்லவில்லை. இதனையடுத்து மாணவி தனது தோழி ஒருவரது ஜிபே எண்ணிற்குப் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார். பின்னர் தோழிக்கு போன் செய்த கல்லூரி மாணவி பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட தோழி மூன்று நாட்களாகியும் பணத்தைத் தராமல் இருந்துள்ளார். பணத்தைக் கேட்கச் சென்ற போது கல்லூரி மாணவிக்கும் தோழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்துக் கடந்த வியாழக்கிழமை மாலை கோடம்பாக்கம் ரயில் நிலையம் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி மாணவிக்குத் தோழி போன் செய்து கூறியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காகக் கல்லூரி மாணவி தனது சகோதரர் மற்றும் ஆண் நண்பர் ஆகியோர் உடன் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சென்றுள்ளார். அப்போது கல்லூரி மாணவியின் தோழி, அவரது கல்லூரி தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் அங்கு இருந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு தரப்பினருக்கும் பணப் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் எழுந்தது. இதனை அடுத்து சாலையிலேயே இரண்டு தரப்பு மாணவிகளும் மாறி மாறி ஆபாசமாகத் திட்டிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவியுடன் வந்த ஆண் நண்பர்களை, தோழி உடன் வந்த ஆண் நண்பர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும் அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு தரப்பினரையும் தடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாகக் கல்லூரி மாணவி கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கல்லூரி மாணவியின் தோழி, அவரது ஆண் நண்பர்களைக் காவல் நிலையம் அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் கல்லூரி மாணவி தரப்பினர் தங்களைத் தாக்கிவிட்டதாக மாணவியின் தோழியும் புகார் அளித்துச் சென்றுள்ளனர். பட்டப்பகலில் கல்லூரி மாணவிகள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Vande Bharat: சென்னை - கோவை வந்தே பாரத்.. டிக்கெட் விலை நிலவரம், மக்களின் கோரிக்கைகள் என்ன?