தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நான் 14 வயதிலேயே திமுகவுக்கு ஓட்டு கேட்டவன்' - கோவை செல்வராஜ் தடாலடி! - Jayalalitha

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ், காலில் விழுந்து கொல்லைப்புறமாக ஆட்சி நடத்தியதாக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

காலில் விழுந்து கொல்லைப்புறமாக ஆட்சி நடத்திய இபிஎஸ் - திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்!
காலில் விழுந்து கொல்லைப்புறமாக ஆட்சி நடத்திய இபிஎஸ் - திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்!

By

Published : Dec 7, 2022, 12:47 PM IST

Updated : Dec 7, 2022, 3:27 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் இன்னும் முற்றுப்புள்ளியை அடையாத நிலையில்தான் உள்ளது. இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் இருந்தார். இவருக்கு ஓபிஎஸ் சார்பில், கோவை மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று (டிச.7) சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைக் கோவை செல்வராஜ் நேரில் சந்தித்தார். தொடர்ந்து கோவை செல்வராஜ், தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கோவை செல்வராஜ், “14 வயதில் இருக்கும்போது நான் திமுகவிற்கு ஓட்டு கேட்டிருக்கிறேன். தற்போது திமுகவின் தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன். அதிமுகவில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பயணித்த நான், அவர்களுக்கு வக்காலத்து வாங்கியதுக்குப் பொதுமக்களிடையே மன்னிப்பு கேட்கிறேன்.

கோவை செல்வராஜ் செய்தியாளர் சந்திப்பு

தற்போது தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. பொருளாதாரம், தொழில் வளர்ச்சி சிறப்பாகவும் சீராகவும் உள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பயணிப்பேன். தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் திகழ்ந்து வருகிறது.

முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி இருந்தபோது ஏழை, எளிய விவசாயிகளுக்குப் பத்தாயிரம் பேருக்குத்தான் இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒன்றரை லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளார். விரைவில் 5,000 பேருடன் திமுகவில் இணைவோம்.

கோவை, திமுக கோட்டையாக இருக்கும். 50 கிலோமீட்டருக்கு ஒரு ஆள் இருப்பவர்கள் எல்லாம் முதலமைச்சரைப் பற்றிப் பேசுகிறார்கள். காலில் விழுந்து கொல்லைப்புறமாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை கிடையாது. தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதித் தெளிவான முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன்.

ஜெயலலிதா இல்லாத காரணத்தால், எந்த பதவியையும் இவர்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வரும் வரையில், அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்பட அமைச்சர்கள் வாயை மூடி இருந்தனர். மருத்துவமனையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு ஏன் வைத்தியம் பார்க்கவில்லை? ஏன் அறுவை சிகிச்சை செய்யவில்லை? என இபிஎஸ், ஓபிஎஸ் கேட்கவில்லை.

ஜெயலலிதாவுக்குச் சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தி, இதய அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர் தற்போது வரை உயிரோடு இருந்திருப்பார். ஜெயலலிதாவின் மருத்துவத்துக்காக வெளிநாட்டுக்கும் கூட்டிச் செல்லவில்லை. இதையெல்லாம் பார்த்த பின்புதான் இவர்கள் போன்ற சுயநலவாதிகளோடு இருக்க வேண்டாம் என்று கருதி, கடந்த இரண்டு மாதங்களாக எதுவும் பேசாமல் இருந்தேன்.

அதிமுக கட்சி அல்ல; அது ஒரு கம்பெனியாக செயல்பட்டு வருகிறது. இனிமேல் அதிமுக கட்சி இருக்காது. எனவே தொண்டர்கள் அனைவரும் எந்த ஒரு அச்சமும் இன்றி தாய்க் கழகமான திமுகவிற்கு வர வேண்டும். அதிமுக கட்சி இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் இருக்காது. கொடநாடு வழக்கில் கைதிகள் எல்லாம் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்படி யார் குற்றவாளிகளோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:யார் தீபம் ஏற்றுவது? ஓபிஎஸ் குடும்பம் - திமுகவினர் இடையே மோதல்!

Last Updated : Dec 7, 2022, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details