சென்னை: கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் மாணவர்களை 'ராகிங்' செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அது நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கல்லூரிக்கல்வி இயக்குனர் கீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்களுக்கு மீண்டும் வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே, வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி மீண்டும் அறிவுறுத்தி உள்ளார்.
கோவை பீளமேட்டில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் உள்ளது. இங்கு மாணவர்கள், மாணவிகளுக்கான விடுதிகளும் உள்ளன. இந்த கல்லூரியில் முதலாமாண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் சிலர், மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அந்த மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த 7 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே, அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, ராகிங் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யுமாறு, அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், கல்லூரிக்கல்வி இயக்குனர் கீதா மீண்டும் இன்று (நவ.8) அறிவுறுத்தி உள்ளார். அதில், 'கல்லூரி மாணவர்களிடம் ராகிங் நடக்காதவாறு ஏற்கனவே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அரசு, அரசு உதவிப்பெறும், சுயநிதிக் கல்லூரிகளின் முதல்வர்கள், செயலாளர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.