சென்னை:கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பில் 14 ஆவது நபராக முகமது அசாருதீன் (வயது37) என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு, சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில், முக்கிய குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக அசாருதீன் என்பவரை இந்தியாவின் என்.ஐ.ஏ அமைப்பினர் கைது செய்து கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைத்தனர்.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (வயது28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ. போலீசார் 11 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான ஆவணங்கள், முக்கிய ஆதாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவைகளை கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் முகமது இர்தியாஸ் என்பவரை 13 வது நபராக என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்த நிலையில், சம்பவத்தின் போது உயிரிழந்த நபருடன் சேர்த்து 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.