கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் அனைத்து கூட்டுறவு நகைக் கடன்கள் பற்றிய முழு புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், கடந்த அதிமுக ஆட்சியின் போது நகைக் கடன் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பகுப்பாய்வு
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய விவரங்கள், கடன் பெற்ற நாள், தொகை, கடன் கணக்கு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன் தள்ளுபடி மோசடி முறைகேடாக கடன்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்தில், ரத்தன் லால், அவரது மனைவி சுந்தரி பாய், மகன்கள் ராஜ்குமார், தன்ராஜ் மற்றும் மருமகள்கள் கான்கி தேவி, மஞ்சு என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை அடகு வைத்து கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மொத்தம் நகைக் கடன்கள் மூலம் ரூ.4.72 கோடி வரை முறைகேடாக கடன் பெற்றுள்ளனர்.
அதே போல கன்னியாகுமரி, சிவகங்கை, திருவாரூர்,திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மிகவும் வறியவர்களுக்கான அந்தியோதயா அன்னா யோஜனா திட்ட அட்டை வைத்திருப்பவர்களின் பெயரிலும் நூற்றுக்கணக்கான கடன்கள் மூலம் பல கோடி ரூபாய் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து முறைகேடான வழிகளில் கடன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
கவரிங் நகைகள்
இன்னும் சில கூட்டுறவு கடன் சங்கங்களில் போலி கவரிங் நகைகளை வைத்தும் நகைகளை வைக்காமலும் கடன் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க :'பள்ளிகள் திறப்பு அரசின் கொள்கை முடிவு'