சென்னை:கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தைக் கலைத்து விட்டு, புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கடந்த 9ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,கூட்டுறவு சங்கங்களைக் கலைக்க எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டம், இரும்பை கிராமத்தைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி உள்ளிட்ட ஆறு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ”கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், பெண்கள், ஏழைகள், நகைக்கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன், விவசாயக் கடன்கள் பெற்று பயன்பெற்று வரும் நிலையில், கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் லாபகரமாக, நிதி ஸ்திரத்தன்மையோடு இயங்கி வருவதாகக் கூறிய அமைச்சரே, சங்கங்களை கலைக்க வேண்டுமெனத் தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.