தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம் பேச்சாளர்கள் எல்லாம் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு - முதல்வர் பெருமிதம் - St Thomas College Chennai

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்பித்துள்ளார்.

இளம் பேச்சாளர்கள் எல்லாம் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு - முதல்வர் பெருமிதம்
இளம் பேச்சாளர்கள் எல்லாம் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு - முதல்வர் பெருமிதம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 4:03 PM IST

சென்னை:பேச்சுப் போட்டிகளின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள இளம் பேச்சாளர்களைத்தான் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு என்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி வளாகத்தில் இன்று (ஆகஸ்ட்-23) நடைபெற்ற பரிசுகளை வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி வெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும், தெளிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இப்பேச்சுப் போட்டிகளில் 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

ஒவ்வொறு மாவட்டத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.20,000, ரூ10,000 மற்றும் ரூ.5,000 ஆகிய பரிசுகளும், மாநில அளவில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.1,00,000, ரூ,50,000 மற்றும் ரூ.25,000 ஆகிய பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க: கடலோர பாதுகாப்பு குழுமம் எங்கே? - தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கேள்வி

இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தைச் சார்ந்த சகோதரர்கள், நிர்வாகிகள் இந்தப் பேச்சுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அதில் மாநில அளவில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கியிருக்கிறோம்.

ஆனால், என்னைக் கேட்டால், இந்த பேச்சுப் போட்டிகளின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள இளம் பேச்சாளர்கள் தான் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு என்று நான் சொல்லுவேன். பகுத்தறிவுக் கருத்துகளை பட்டெனச் சொல்லும் பெரியார் இந்த சமுதாயத்திற்காக என்னென்ன கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை இதன் மூலமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், உலக அரசியலையெல்லாம் தன் மயக்கும் மொழியாலேயே சொல்லி அறிவூட்டியவர் அண்ணா அவர்கள். அடுக்குமொழியில் கனல் தெறிக்கக்கூடிய வசனங்கள் பேசி தமிழர்களுக்கு உணர்ச்சியை ஊட்டியவர்கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

இப்படி அவர்களை எல்லாம் வழிகாட்டிகளாகக் கொண்டு நம்முடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படி வரலாறு போற்றும் பேச்சாளர்களை உருவாக்கித் தரும் களமாக, இந்த பேச்சுப் போட்டியைச் மிகச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள்.

அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கக்கூடிய நம்முடைய மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள், அந்தப் பணியை சிறப்போடு செய்து காட்டியிருக்கிறார்.

அதேபோல, நம்முடைய மதிப்பிற்குரிய தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என அவர் கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், கே.எஸ். செஞ்சி மஸ்தான், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் எம்பிக்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, மோடி ஆட்சி மீண்டும் அமையும்" - அண்ணாமலை உறுதி!

ABOUT THE AUTHOR

...view details