சென்னை: முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (18.02.2023) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற CREDAI FAIRPRO 2023-ல் கலந்து கொண்டு தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்குத் திட்டம்-2030-யை அறிமுகப்படுத்தினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், அனைத்துத் துறையையும் உள்ளடக்கியிருக்கக்கூடிய திராவிட மாடல் வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டு வருகிறது. நம்முடைய இலக்கு பெரிதாக இருப்பதால், நம்முடைய முயற்சிகளும் பெரிதாக அமைந்துள்ளன. அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் அணிவகுத்து வரக்கூடிய காட்சியே இதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. இப்படி வருகை தரக் கூடிய நிறுவனங்களை வரவேற்கும் அளவுக்கு உள்கட்டமைப்புகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது.
புதிய புதிய தொழில் கொள்கைகளையும் அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரியல் எஸ்டேட் தொலைநோக்குத் திட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாகரிக மனிதரின் அடையாளங்களில் முக்கியமானதாக விளங்கும் வீட்டு வசதியினை தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உருவாக்கித் தரக்கூடிய முயற்சியில் இந்த அரசு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது. ஆகவே முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துறையில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்வில் பங்கேற்பதை சிறப்பான ஒன்றாக நான் கருதுகிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சி என்ற அடிப்படையில் அமைய வேண்டும் என்பதுதான் அரசினுடைய நோக்கம். அந்த வகையில் கல்வி, வேளாண்மை, மருத்துவம், சிறு தொழில், பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் போன்ற எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் மக்களுக்குத் தேவையான வீட்டு வசதிகளையும், அனைவரும் பெற வேண்டும் என்ற அந்த நோக்கத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்க இந்தியாவிலேயே முதன்முறையாக குடிசைவாழ் மக்களின் வீட்டுவசதிக்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அவர் அமைத்து தந்த பாதையில் தான் இன்று நம் மாநிலம் பெருமிதத்தோடு வளர்ந்து வருகிறது. அந்த நோக்கத்துடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது இந்த அரசு. தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அனைத்துப் பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதாகவும், அதனால் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் ‘இந்தியா டுடே’ ஆங்கில இதழ் அண்மையில் பாராட்டு தெரிவித்து கட்டுரை வெளியிட்டிருப்பதை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த, நடுத்தர வருவாய் மக்கள் மற்றும் உயர் வருவாய்ப் பிரிவு மக்களுக்கு வீட்டு வசதியினை வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக நம்முடைய கழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், 1991-இல் 1 கோடியே 90 இலட்சமாக இருந்த நகர மக்கள் தொகை, 2011-ல் 3 மூன்று கோடியே 49 இலட்சமாக அதிகரித்து, 2031-இல் 5 கோடியே 34 இலட்சம் அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பார்த்தால், தமிழ்நாட்டில் 832 நகரங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், நகரமயமாதலில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் குடியேற்றம் ஆகியவற்றால் நகரங்களில் ஏற்படும் விரைவான வளர்ச்சியால்தான் பெருநகரங்கள் உருவாகின்றன. இதைக் கருத்தில்கொண்டுதான், தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்தி வருவதோடு, பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், ஐ.நா. அவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் (Sustainable Development Goals) பொருந்தி உள்ளது. “எல்லாருக்கும் எல்லாம்” என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, நாங்கள் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறோம். மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளில் எந்த ஒரு தனிமனிதரையும் விட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தி, நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த அளவுகோலை அனைத்துத் திட்டங்களிலும் பொருத்திப் பார்த்து செயல்படுத்தி வருகிறோம்.
குறிப்பாக வீட்டு வசதித் துறையில், 2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பான, வாங்கும் திறனுக்கேற்ற வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் அளித்தல், குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல், நகரமயமாதலை மேம்படுத்துதல், நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துதல்ஆகிய குறிக்கோள்களை வைத்துள்ளோம். தொழில் துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விண்ணப்பங்களுக்கு விரைவான அனுமதிகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது.