சென்னை:இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 10) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸில் சமீபத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்து ஒன்றிய வெளியுறத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த மூன்று மீனவர்களுடன் இந்தோனேஷிய கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி இந்தோனேசிய வான் மற்றும் கடற்படை அலுவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இந்தோனேசியாவின் ஆஷேயிலுள்ள டிட்போலைர்ட் பியருக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அம்மீனவர்கள், அந்தமான் பதிவு எண் கொண்ட மீன்பிடிக் கப்பலில் (IND-AN-SA-MM-2110) மீன்பிடிக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டுள்ளனர்.