சென்னை:தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை செய்யப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை (டிச.19) இரவு 10.30 மணிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லியில் சந்திக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, முதலமைச்சர் தரப்பிலிருந்து பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், முதலமைச்சர் பிரதமரை டெல்லியில் சந்திக்கும் நிலையில் நாளை (டிச.19) மதியம் 12 மணிக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் தென் மாவட்ட மழை தொடர்பாக அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். வெள்ள பாதிப்பு குறித்து ஒன்பது துறை அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, பிஎஸ்என்எல், ரயில்வே, அஞ்சல், விமான நிலைய ஆணையம், கடலோர காவல்படை,இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, ஆளுநர் ஆர் என் ரவி கனமழை குறித்து X தளத்தில் பதிவு செய்திருந்தார்.
அதில், “தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும். மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்கவும். மத்திய, மாநில அரசுத்துறைகள் இயல்புநிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் நிலைமை சரிசெய்ய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்” என பதிவிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு..!