சென்னை: மு.க. ஸ்டாலின் மீலாதுன் நபியையொட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான 'மீலாதுன் நபி' திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நபிகள் நாயகம் இளம்பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாகச் சீலர்.
ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களால் அமையப்பெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கருத்துக் கேட்புக் கூட்டம் - வெளிமாநில செய்தியாளர்களால் ரகளை