சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
கரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஒரு வார காலத்திற்கு முதலமைச்சர் ஓய்வில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்னதாக, அங்கிருந்து சென்னை தலைமைச்செயலகத்துக்குச் சென்று, குடியரசுத்தலைவர் தேர்தலில், முதலமைச்சர் முதல் நபராக வாக்களித்தார். அதன்தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனித்து வந்த முதலமைச்சர், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்தும் அமைச்சர்கள், அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்துக்கு வருகை தந்து நிதித்துறை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பொதுமக்களின் வேண்டுதலால் திரும்பிவந்துள்ளேன்' - சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் பேட்டி