சென்னை:கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற, ‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
நினைவுப்பரிசு:இந்நிகழ்வில் இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் சிவன், சந்திராயன் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, விஞ்ஞானிகள் நாராயணன், இராஜராஜன், சங்கரன், வனிதா, ஆசிர் பாக்கியராஜ் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
நினைவுப்பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பயின்ற பள்ளி, குடும்பப் பின்னணி குறித்த விவரங்களுடன் அவர்களைக் குறித்த ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, “இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த தமிழ்நாட்டு அறிவியல் மேதைகள் ஒன்பது பேர் இந்த மேடையில், அமர்ந்திருப்பது என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.
வீரமுத்துவேல் பிறந்த தமிழ்நாடு:கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு - வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் – மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாடிய மகாகவி பாரதியார் இப்போது இருந்திருந்தால்,
“இஸ்ரோ சிவனும், மயில்சாமி அண்ணாதுரையும் பிறந்த தமிழ்நாடு, நாராயணனும், சங்கரனும், ராஜராஜனும், ஆசீர் பாக்கியராஜும், வனிதாவும், நிகார் ஷாஜியும் பிறந்த தமிழ்நாடு, வீரமுத்துவேல் பிறந்த தமிழ்நாடு” என்று பாராட்டிப் போற்றியிருப்பார்.
விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள்: அந்தளவுக்கு உலகத்துக்கே இந்தியாவின் பெருமையை உணர்த்துகின்ற தமிழர்களாக நீங்கள் இங்கே உயர்ந்து நிற்கிறீர்கள். ஆகஸ்ட் 23ஆம் நாள் இந்தியாவுக்கு மட்டும் இல்லை, உலகத்துக்கே முக்கியமான நாள். நிலாவில் இந்தியா இறங்கிய நாள். சந்திரயான் விண்கலத்துடன் லேண்டரானது வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நாள். 1959ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013 ஆம் ஆண்டு சீனாவும் தான் இந்தச் சாதனையைச் செய்திருக்கின்றனர்.
2008 ஆம் ஆண்டு நிலாவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023 ஆம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது. அதாவது நிலாவைத் தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பையும் இந்தியா அடைந்திருக்கிறது. இதுவரை அறியப்படாத நிலவின் தென் துருவப் பகுதியைச் சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியிருக்கிறது.
அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த, அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் செயல்படுத்திக் காட்டியது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை. சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாகப் பரவியது. இப்படிப்பட்ட பெருமையைத் தமிழ்நாட்டுக்குத் தேடித்தந்த அறிவியல் மேதைகளான உங்கள் எல்லோரையும் தமிழ்நாடு முதலமைச்சராகக் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
தமிழர்களுடைய வானியல் அறிவு: தமிழ் அறிவு என்பதே அறிவியல் அறிவு தான். எதையும் பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவு தான் தமிழறிவு. நிலம், தீ, நீர், வளி விசும்போடு ஐந்தும் என்று அன்றைக்குச் சொன்னது தொல்காப்பியம். நிலம், தீ, காற்று, நீர், வானம் ஆகிய ஐந்தும் கலந்தது தான் உலகம் என்று சொல்லியிருக்கிறது. நில அமைப்பை ஐந்தாகப் பிரித்து, பொருளை மூன்றாகப் பிரித்து வாழத் தொடங்கிய இனம் நம்முடைய தமிழினம். இதில் தமிழர்களுடைய வானியல் அறிவு தனித்தன்மை வாய்ந்தது.
விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழ்நாட்டின் அறிவாக இருந்தது. அதுதான் இந்த அறிவியல் மேதைகளை உருவாக்கி இருக்கிறது. இன்னும் சொன்னால், இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அதுதான் மிகமிகப் பெருமைக்குரியது. மிகமிகச் சாதாரண ஊர்களில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படித்து முன்னேறியவர்கள். முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள்.
வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்: அதிலும் குறிப்பாக 2 பேர் பெண்கள். இந்த மேடையே சமூகநீதியின் அடையாளமாக இருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தினர் இவர்கள் தான் தங்களுடைய வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.
டாக்டர் கே.சிவன் - கன்னியாகுமரி மாவட்டம், சரக்கல்விளை என்ற ஊரில் பிறந்தவர். 1982 ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்து, 2018 ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக உயர்ந்த ஆற்றலுக்குரியவர். பி.எஸ்.எல்.வி மூலம் 104 விண்கலங்களுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ராக்கெட் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்ற மென்பொருளை உருவாக்கியவர். சந்திரயான் - 2 முழு வெற்றி அடையாத நிலையில், அவர் கண்கலங்கிய காட்சிகள் தான், ஆற்றிய பணிகள், அதன் மேல் அவர் வைத்திருந்த மாறாத பற்றின் அடையாளமாக வெளிப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
மயில்சாமி அண்ணாதுரை – பொள்ளாச்சி அருகில் கோத்தவாடி என்ற கிராமத்தில் பிறந்தவர். 36 ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றியவர். மூன்றாண்டுக் காலம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் திட்ட இயக்குநராக இருந்தவர். பல்வேறு விண்கலங்களைச் செலுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். சந்திரயான் - 1 வடிவமைப்பில் இந்தியக் கொடியைப் பொருத்தியவர் இவர். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து விண்ணைத் தொட்டவர்.
வி.நாராயணன்– குமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருவனந்தபுரம் திரவ உந்துசக்தி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இஸ்ரோ தயாரித்த பெரும்பாலான ராக்கெட் தயாரிப்புகளில் இவருடைய பங்கு அளப்பரியது. சந்திரயான் - 3 விண்ணில் செலுத்தப் பயன்படுத்திய மார்க்-3 ராக்கெட் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானி விருதை இரண்டு முறை பெற்றவர்.
ஏ.ராஜராஜன் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். இஸ்ரோவில் வெளியீட்டு அங்கீகார வாரிய தலைவராக இருக்கிறார். ககன்யான், எஸ்.எஸ்.எல்.வி போன்ற இஸ்ரோவுடைய விரிவடைகின்ற தேவைகளுக்குத் திடமான மோட்டார்கள் தயாரிப்பதில் இவருடைய பங்கு அளப்பரியது. இஸ்ரோ மெரிட் விருதை 2015 ஆம் ஆண்டு பெற்றவர்.