தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அனந்தகிருஷ்ணன் மறைவு கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பு’- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கல்
இரங்கல்

By

Published : May 29, 2021, 3:15 PM IST

சென்னை: நுரையீரல் தொற்றால் ஒரு வாரமாக பாதிக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. அனந்தகிருஷ்ணன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று(மே29) காலை அவர் உயிரிழந்தார்.

கணினியிலும், இணையத்திலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதில் முயற்சி மேற்கொண்டு, வெற்றி பெற்றவர்களில் அனந்தகிருஷ்ணனும் ஒருவர். பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர நடைமுறைக்கும் இவரே முக்கிய காரணமாக இருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் மறைவு கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அறிவுக்களஞ்சியம்” என்று அழைக்கப்படும் அனந்தகிருஷ்ணன் முத்தமிழறிஞர் கலைஞர் போற்றிய தலை சிறந்த கல்வியாளர். ஏன், இந்த நாடே போற்றும் நிர்வாகத் திறன் படைத்தவர். அர்த்தமிகுந்த, அறிவுசார்ந்த கல்வி கட்டமைப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் தனது இறுதி மூச்சுவரை பயணித்த தமிழ்நாட்டின் பெருமைக்குரிய கல்வியாளரை இழந்திருப்பது கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வந்த நிலையில், அது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான அனந்தகிருஷ்ணன், நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என்று அரசுக்கு பரிந்துரைத்தார்.

பொறியியல் மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தும் வகையில் ஒற்றைச் சாளர முறையை அறிமுகம் செய்த பெருமையும் முனைவர் அனந்தகிருஷ்ணனையே சாரும். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கல்வி சார்ந்த கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி கடைபிடிக்கும் சமூகநீதி கொள்கைகளை ஆதரித்தவர்; பாராட்டியவர்.

பாமகவின் சமூகநீதி பயணத்தில் அனந்த கிருஷ்ணன்

டி.எம்.ஏ பாய் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் அரசு தலையிட முடியாத சூழல் ஏற்பட்டப்போது, அதை மாற்றுவதற்காக பாமக சார்பில் முன்வைக்கப்பட்ட மாதிரி சட்டத்தை தயாரித்த குழுவில் முனைவர் அனந்தகிருஷ்ணனும் இடம் பெற்றிருந்தார்.

அந்த மாதிரிச் சட்டம் தான் பின்னாளில் 93வது அரசியல் சட்டத் திருத்தம் செய்யப்படுவதற்கும், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும் அடிப்படையாக அமைந்தது. அந்த வகையில் பாமகவின் சமூகநீதி பயணத்தில் அனந்த கிருஷ்ணனும் பங்கேற்றுள்ளார்.

முனைவர் அனந்தகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details