தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர்: ரூ.50 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு! - உதவி ஆய்வாளர் கொலை

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாயை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர்
பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர்

By

Published : Feb 1, 2021, 4:04 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட முருகவேல் என்பவரை காவல் உதவி ஆய்வாளர் பாலு கண்டித்ததால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றி கொலைசெய்தார். பின்னர், அவரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், முருகவேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பணியில் ஈடுபட்டிருக்கும்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த பாலு நேற்றிரவு (ஜன.31) பணியில் இருந்தபோது, ஏரல் கடைவீதியில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டிருந்த முருகவேலை கண்டித்து அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த முருகவேல் இன்று (பிப்.01) அதிகாலை இருசக்கர வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் மீது சரக்கு வேனால் ஏற்றி கொலை செய்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பணியில் ஈடுபட்டிருக்கும்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு சிறப்பினமாக 50 லட்சம் ரூபாயும், விபத்தில் அவருடன் இருந்து காயமடைந்த காவலர் பொன்சுப்பையாவுக்கு 2 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:உதவி ஆய்வாளரை வாகனம் ஏற்றிக்கொன்றவர் நீதிமன்றத்தில் சரண்!

ABOUT THE AUTHOR

...view details