சென்னை:கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு (Vishwanath Pratap Singh) சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர்களது வேண்டுகோளை ஏற்று, மெரினா கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அவரது முழு உருவச் சிலை அமைத்திட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (நவ.27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வி.பி.சிங் சிலையினை திறந்து வைக்கிறார்.
மாவீரர்கள் நாள்: தமீழிழத்தில் மக்களுக்காகப் போராடி இன்னுயிர் ஈத்த வீரர்களை நினைவு கூறும் தினமாக, நவம்பர் 27ஆம் தேதி மாவீரர்கள் தினமாக ஈழத்தில் பார்க்கப்படுகிறது. இதர பிற்படுத்தபட்டோர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக மண்டல கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய சமூக நீதி காவலராக பார்க்கபடுகின்ற வி.பி.சிங்கிற்கு, தமீழிழ மாவீரர்கள் தினத்தன்று சென்னையில் சிலை திறக்கப்படவுள்ளது.
யாருக்கெல்லாம் அழைப்பு?வி.பி. சிங் சிலை திறப்பு நிகழ்ச்சியில், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். மேலும் வி.பி.சிங் மனைவி சீதா குமாரி, அவருடைய மகன்கள் அஜயா சிங், அபய் சிங் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள். மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான அழைப்பு என்பது முறையாக அனைவரிடம் கொண்டு சேர்க்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.