தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வார் ரூம் (கட்டளை மையம்) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு, தேவை குறித்து அறிய அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக அமைகிறது.இந்தக் கட்டளை மையத்தை நிர்வகிக்க தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகு மீனா ஆகிய 6 ஐ.ஏ.எஸ் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில் கட்டளை மையத்திற்கு அதிரடியாக வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மையத்தின் ஒருங்கிணைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, வானகரம் பகுதியிலிருந்து பங்கஜம் என்பவர், வார் ரூம் ஹெல்ப் லைன் எண்ணிற்கு அழைத்தார். உடனடியாக அந்த அழைப்பை எடுத்து பேசிய முதலமைச்சர், அவரின் தேவையை பதிவு செய்து கொண்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். முதலமைச்சரின் இந்த உடனடி உதவிக்கு, பங்கஜன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.