சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராசன் மற்றும் மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் பக்கங்கள் நேற்று (மே 31) திடீரென முடக்கப்பட்டது. இதற்கு, "சட்ட ரீதியான கோரிக்கையை ஏற்று சீமானின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது" என அவரது முடக்கப்பட்ட பக்கத்தில் காரணமாக ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சீமான் உள்ளிட்ட பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீமான் உள்ளிட்டோரின் சமூக வலைதள பக்கங்களை முடக்க தமிழ்நாடு காவல் துறை தரப்பில் இருந்துதான் பரிந்துரைக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆகவே, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே, இவ்விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என பெருநகர சென்னை காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டர் பயனர் ஐடிக்கு பேட்ச் நிறம் வழங்குதல், சந்தா முறை, வார்த்தை எண்ணிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.