தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து சமய அறநிலையத்துறை குறித்த பிரதமரின் பேச்சு; முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்! - Vallalar 200 ceremony one year charity event

Vallalar 200: பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா என திமுக அரசைப் பற்றி பிரதமர் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
“தமிழகம் பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக உள்ளது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 8:54 AM IST

சென்னை:இந்து சமய அறநிலையத் துறை சார்பில், “வள்ளலார் 200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து அமைக்கப்பட்ட சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து, வள்ளலார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை கலைவாணர் அரங்கில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நேற்று (அக்.05) நடைபெற்ற “வள்ளலார் – 200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்பதை அறநெறியாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய, அருட்திரு வள்ளலாரின் 200வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், ‘தனிப்பெரும் கருணை நாளில்’ இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இனிய விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

மேலும், என்னைப் பொறுத்தவரையில் இது நிறைவு விழா மட்டுமல்ல, நிறைவான விழா. பசிப்பிணி போக்க அணையா அடுப்பை உருவாக்கிய அண்ணல் பெயரால் அரசின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வள்ளலார் வாழ்க்கை தொடர்பாக கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அறிவுப் பசியையும், வயிற்றுப் பசியையும் போக்கும் விழாக்களாக இவை அமைந்துள்ளது. அனைத்துயிரும் ஒன்று என்ற வள்ளல் பெருமானாரின் எண்ணத்தை இன்று நாம் விதைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419வது வாக்குறுதியாக ‘வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம்.

இந்நிலையில், ‘சாதி சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கப் போதனைகளைப் போற்றும் வகையில் இது அமையும்’ என்று சொல்லப்பட்டது. அந்த மையத்தின் ஆணையினை இன்று உங்கள் முன்னால் வழங்கியிருக்கிறோம். விரைவாக அந்தப் பணிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு, மிகச் சிறப்பாக அது கட்டி முடிக்கப்படும்.

வள்ளலாரின் அறிவு ஒளியில் இது போன்ற பிளவு சக்திகள் மங்கிப் போவார்கள். நாம் வள்ளலாரை உயர்த்திப் பிடிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை.மேலும், பெரியாரையும் போற்றுகிறோம், வள்ளலாரையும் கொண்டாடுகிறார்களே என்பதுதான் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொள்கிறார்கள், கோயில்கள் அனைத்தையும் பொன்போல போற்றிப் பாதுகாக்கிறார்களே, இவர்களை என்ன சொல்லி குற்றம் சாட்டுவது என்று சிலருக்கு குழப்பமாக இருக்கிறது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வருகை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றிப் பேசி இருக்கிறார். அவர் மத்தியப்பிரதேசத்திற்குச் சென்று பேசினாலும், அந்தமானில் பேசினாலும், தெலங்கானாவில் பேசினாலும், தமிழ்நாட்டைப் பற்றித்தான் பேசுகிறார். அவரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோயில் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்று பகிரங்கமாக அவர் பேசி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமருக்கு நான் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், இதனை ஒரு தமிழ் நாளிதழ் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழின் நிர்வாகி ஒருவர் புகழ் பெற்ற திருக்கோயில் ஒன்றில் அறங்காவலர்களில் ஒருவராக இருக்கிறார். அப்படியானால், அவர் அந்தக் கோயிலை ஆக்கிரமித்துள்ளார் என்று அர்த்தமா?

மேலும், பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் போய் பேசுவது முறையா? தர்மமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோயில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யான செய்தியை இந்திய நாட்டின் பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்?

இந்நிலையில், இரண்டு ஆண்டு காலத்தில் 3,500 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தவறா? 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா? 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவறா?

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1,250 திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எதைத் தவறு என்கிறார் பிரதமர்? பிரதமரின் பார்வையில்தான் தவறு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையும் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற பொதுத் தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம். கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம். அதனால்தான் கருணை வடிவிலான வள்ளலாரைப் போற்றுகிறோம்.

இந்நிலையில், அதற்கு அடையாளமாக வள்ளலார் 200 நிகழ்ச்சியில் ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். கடலூர் மாவட்டத் தலைநகரில் 17 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கின்ற புதிய பேருந்து நிலையத்திற்கு “அருள்பிரகாச வள்ளலார்” அவர்களின் பெயர் சூட்டப்படும் என்பதை மகிழ்ச்சியோடும், பெருமையோடும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வழியில், வாடிய உயிர்கள் அனைத்தையும் வாழ வைக்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்றைக்கும் செயல்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் மூதாட்டி அடித்துக் கொலை.. காலணியை வைத்து கொலையாளியை கைது செய்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details