சென்னை: சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு மிக்ஜாம் புயல் பாதிப்பின் மீட்புப் பணிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், “மிக்ஜாம் புயலால் வரலாறு காணாத கனமழையை சென்னையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் எதிர்கொண்டன. எத்தகைய இடர் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறையும், பொறுப்பும் கொண்ட ஆட்சியை நடத்தி வருகின்ற காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அத்துடன் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகள் பலவற்றிலும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மற்ற இடங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்தான் மிக்ஜாம் புயலையும், கனமழையையும் எதிர்கொள்ள நேரிட்டது.
ஒரே நாளில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 40 சென்டி மீட்டருக்கு மேல் என்பதால், சென்னை கடந்த 50 ஆண்டுகளில் காணாத பேரிடரை எதிர்கொண்டது. டிசம்பர் 4ஆம் நாள் முழுவதும் கனமழை பெய்த நிலையில், மறுநாள் (டிசம்பர் 5) அதிகாலைக்குள்ளாக ஏறத்தாழ பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்திருந்தது. அதற்கு காரணம், திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் பணிகளும், மழை பெய்த நேரத்திலும் மாநகராட்சி மற்றும் அரசுத் துறை பணியாளர்களின் அயராத உழைப்பும்தான்.
2015ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை முறையான வகையில் திறக்காமல், ஒரே இரவில் அளவுக்கதிமாகத் திறந்து விட்டு உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்தின்போது சென்னைக்குள்ளேயே வாகனங்கள் வர முடியாத நிலை இருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த சில மணிநேரங்களிலேயே செங்கல்பட்டு முதல் சென்னை வரையிலான ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து சீரானது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் சீரான நிலைதான்.
அதே நேரத்தில், சென்னை புறநகரில் ஏரிகள் சூழ்ந்த பகுதிகளிலும் கடல் மட்டத்திற்கு இணையான சென்னையின் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் வெள்ளமாகத் தேங்கி இருந்ததை அறிந்து, அங்குள்ள மக்களுக்கு உதவிடவும், அவர்களை மீட்கவும், அந்த பகுதியில் வெள்ள நீரை வடியச் செய்து இயல்பு நிலை திரும்பிடவும் அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் பணிகளை மேற்கொண்டன.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு உதவிட வேண்டுமென உங்களில் ஒருவனான நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடர்ந்து களப்பணியாற்றி, மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
தண்ணீரை வெளியேற்றுவதற்கும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்பதற்கும் கட்சியின் நிர்வாக அமைப்பினரும், சார்பு அணியினரும் முழுவீச்சில் பணியாற்றி, மக்களின் துயர் துடைத்தனர். மழை அளவையும், அதன் தாக்கத்தையும் கண்காணிப்பு அறைக்கு நேரில் சென்று அங்குள்ள அலுவலர்களிடமும், உதவிக்கான அழைப்பு விடுத்த பொதுமக்களிடமும் பேசிய உங்களில் ஒருவனான நான், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் தொடர்ச்சியாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன்.
அதுபோல, இளைஞரணிச் செயலாளரும், இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சருமான உதயநிதி, தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கொட்டுகிற மழை நேரத்திலேயே வெள்ளநீரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், நிவாரணப் பணிகளையும் நேரில் மேற்கொண்டார்.
திமுக மருத்துவ அணிச் செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எழிலன், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். சைதாப்பேட்டையிலும், தென் சென்னையின் மற்ற இடங்களிலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் நிவாரணப் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டனர்.
துறைமுகம் தொகுதியிலும், வடசென்னையின் மற்ற பகுதிகளிலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் பணிகள் விரைந்து நடைபெற்றன. சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.
ஆலந்தூர் தொகுதியிலும், காஞ்சி வடக்கு மாவட்டத்திலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் திமுக நிர்வாகிகள் பணிகளை மேற்கொண்டனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைவுபடுத்தினேன். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் அலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தேன்.