தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சாலைப் பணிகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! - Road works at chennai

CM MK Stalin: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பல துறைகளின் அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழைக்கு முன் அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும்: சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு!
வடகிழக்கு பருவமழைக்கு முன் அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும்: சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 6:39 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.21) பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராம் நகர் 7வது குறுக்குத் தெரு, 3வது பிரதான சாலை மேற்கு பகுதி மற்றும் ராம் நகர் 3வது பிரதான சாலை கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மணப்பாக்கம் – கொளப்பாக்கம் - விருகம்பாக்கம் சாலையில் 4 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், ராமாபுரம் – திருவள்ளுவர் சாலையில் 2 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற சாலைப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அளிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் பணிகளை, போக்குவரத்திற்கு இடையூறில்லாமல் மேற்கொள்வதற்கும், பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 19.9.2023 அன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது சென்னை புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருப்பதாகவும், பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாகவே பழைய சாலைகளின் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும், நம் மாநில சாலைகள் தரமானதாக மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் அன்றைய ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் இன்று முதலமைச்சர், பெருங்குடி மண்டலம் ராம் நகர் பகுதிகளிலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மணப்பாக்கம், கொளப்பாக்கம், விருகம்பாக்கம் சாலை மற்றும் ராமாபுரம் திருவள்ளூவர் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருங்குடி மண்டலம், ராம் நகர் பகுதியில் சுமார் 175 எண்ணிக்கையிலான சாலைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அனைத்து குழாய் பதிக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

ராம்நகர் 7வது குறுக்குத் தெருவில், மாநில நிதி ஆணைய நிதியின் கீழ், சுமார் 700 மீட்டர் நீளம் மற்றும் 6 மீட்டர் அகலத்திற்கு 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், ராம் நகர் 3வது பிரதான சாலை மேற்கு பகுதியில், சிமென்ட் கான்கிரீட் கலவை கொண்டு சாலை வெட்டு சீரமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் காப்பீடு திட்டத்திற்கான பிரிவு தொடக்கம்!

சுமார் 310 மீட்டர் நீளம் மற்றும் 1 மீட்டர் அகலத்திற்கு வைப்பு நிதியின் கீழ், 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும் ராம் நகர் 3வது பிரதான சாலை கிழக்கு பகுதியில், சுமார் 350 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் அகலத்திற்கு மாநில நிதி ஆணைய நிதியின் கீழ், 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோடம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் சாலை முதல் கொளப்பாக்கம் வழியாக மணப்பாக்கம் செல்லும் 5.6 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்த இந்த சாலையில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 2.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைக்கும் பணியும், இதே சாலையில் 330 மீட்டர் நீளத்திற்கு பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத்துறை மூலமாக வடிகால் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் இச்சாலை முழுவதும் பழுதடைந்து போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருந்தது. குழாய்கள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டவுடன் நெடுஞ்சாலைத்துறையால் இச்சாலை போர்க்கால அடிப்படையில் 4 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அங்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சாலை பணியால் விருகம்பாக்கம், கொளப்பாக்கம், குன்றத்தூர், முகலிவாக்கம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்கள் சுமார் 1 லட்சம் பேர் பயனடைவார்கள்.

திருவள்ளூர் நெடுஞ்சாலை கோட்டம், அம்பத்தூர் உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை பிரிவைச் சார்ந்த மாவட்ட முக்கிய சாலையான வளசரவாக்கம் – இராமாபுரம் (வழி) வள்ளுவர் நகர் சாலையின் நீளம் 3 கி.மீ ஆகும். இச்சாலையானது கோடம்பாக்கம் – ஸ்ரீபெரும்புதூரில் (கி.மீ.0/2) தொடங்கி மவுண்ட – பூந்தமல்லி – ஆவடி சாலையில் (கி.மீ. 3/2) முடிவடைகிறது.

மேற்படி சாலையில் திட்டமிடப்பட்ட 2.6 கி.மீ நீளத்துக்கு வடிகால்வாய் கட்டும் பணியில் 1.95 கி.மீ நீளம் வடிகால்வாய் பணி முடிக்கப்பட்டு மழைநீரானது தங்கு தடையின்றி நந்தம்பாக்கம் கால்வாயில் சென்றடைகிறது. மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மூலம் 2.20 கி.மீ நீளத்திற்கு நடைபெற்ற பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிவுற்றது.

தற்போது தார் சாலை அமைக்கும் பணியானது மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், 2 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட சாலைப் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சாலைப் பணியால் கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், நெற்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்கள் சுமார் 5 லட்சம் பேர் பயனடைவார்கள்.

மேலும், முதல்வர் வளசரவாக்கம் முதல் வடபழனி சிக்னல் வரை வரும் சாலைப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் அமைந்துள்ள சாலைப் பணிகளை சீர்செய்திடவும், காலதாமதமில்லாமல் விரைந்து முடித்திடவும் வேண்டும் என்று மெட்ரோ இரயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், போக்குவரத்து காவல் துறை, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வுப் பணிகளை முடித்த பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மற்றும் பல அதிகாரிகளுடன் சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ இரயில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: NEET = 0; நீட் தேர்வின் பலன் '0' தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details