சென்னை:தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.29) வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில், வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக, 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக, 5 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளையும், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் கலைஞர்களுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973-ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலைவடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பராம்பரிய கிராமியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்குதல், 2021-22ஆம் ஆண்டிற்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில், கலைமாமணி விருது பெற்றவர்களில் வயோதிக நிலையில் பொருளாதாரத்தில் நலிந்து, இன்னலில் வாழ்கின்ற கலைஞர்கள் பயன் பெறும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக தற்போது வழங்கப்படும் பொற்கிழித் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி 10 கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.