தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்கட்சிகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பல்வேறு மாநில மற்றும் தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்கட்சிகள்!
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்கட்சிகள்!

By

Published : Mar 1, 2023, 11:00 PM IST

சென்னை:சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஃபருக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வருகை தந்து உரையாற்றினர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெரிய அரசியல் உயரத்துக்கும் தேசிய முக்கியத்துவத்துக்கும் உயருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர், நான் முதல்வன் மற்றும் மக்களை தேடி மருத்துவம்’ போன்ற திட்டங்களை ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தியுள்ளார்.

ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு, விவசாயிகளை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது. மேலும் கரோனா காலத்தில் அவர் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்” என பேசினார். பிறகு பேசிய ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, “இந்தியா இன்று கடினமான சூழ்நிலையில் உள்ளது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அச்சுறுத்தலை நாம் மறந்துவிடக் கூடாது.

காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் பொதுவானது என்ன? "நீங்கள் உண்ணும் உணவு எங்களுக்கு வேறுபட்டது. நீங்கள் பேசும் மொழி எனக்குப் புரியாது. அப்புறம் நமக்கு என்ன பொதுவானது. ஒன்றாக வாழவும், வலிமையான இந்தியாவை உருவாக்கவும் ஆசை. நல்ல நாட்கள் வரும். ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். நம்பிக்கை இல்லாதவன்தான் இறக்கிறான்.

ஸ்டாலின், முன்னேற வேண்டிய நேரம் இது. தேசிய கட்சிக்கு வாருங்கள். தேசத்திற்கு வாருங்கள். நீங்கள் அரசை உருவாக்குவது போல் தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். மேலும் கார்கேயிடம் நான் கூறுவேன், அடுத்த பிரதமர் யார் என்பதை மறந்து விடுவோம். முதலில் தேர்தலில் வெல்வோம். பிறகு யார் பிரதமராவது என்று சிந்திப்போம்” என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கான ஒரு சிறப்பு இடம் உள்ளது. இதனை மேலும் நாம் பலப்படுத்த வேண்டும். இன்று நாடு கடினமான காலங்களில் சென்று கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற சமூகத்தை பிரிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் நமது அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும்.

ஒரே எண்ணம் கொண்ட எதிர்கட்சிகள் அனைத்தும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும். அதுதான் எங்கள் ஆசை. ஃபரூக் கூறியதுபோல பிரதமர் வேட்பாளராக யார் தலைமை வகிக்கப் போகிறார் அல்லது யார் தலைமை வகிக்க வேண்டும் என்பதை நானும் சொல்லவில்லை. நாமும் பிளவு சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும். வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “வட இந்தியக் கட்சிகள் சமூக நீதியைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக நாம் பாஜகவை தோற்கடிக்க முடியும். இது பெரிய இலக்கு இல்லை. எல்லோருக்காகவும் காத்திருக்கிறோம். இந்தியாவில் உள்ள மாநில காட்சிகள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக போராட ஒரு மேடையை உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கட்சியை எப்படி நடத்துகிறாரோ, அதே போல மு.க.ஸ்டாலினும் நடத்துகிறார். மிசாவின்போது அனைத்து மாநிலங்களும் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது மற்றும் கருணாநிதி அதற்கு எதிராக குரல் கொடுத்தார்.

அதில் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர். நமது முதலமைச்சர் ஸ்டாலினும் கூட கைது செய்யப்பட்டார். மிசா திரும்பப் பெறப்பட்டது. இதற்கு கருணாநிதிதான் முக்கிய காரணம். அன்று கருணாநிதி இந்தியாவையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றினார். தற்போது இந்தியாவை நீங்கள் (ஸ்டாலின்) காப்பாற்றுவீர்கள் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

உங்களால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறார்கள். தேசம் உங்களை எதிர்பார்க்கிறது. அந்த தைரியமும், சக்தியும் உங்களிடம் உள்ளது. நீங்கள் கருணாநிதியின் மகன். தமிழ்நாட்டைக் காப்பாற்றினீர்கள், எங்கள் கட்சியைக் காப்பாற்றினீர்கள். இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது ஜனாதிபதியை தேர்வு செய்வார் என கூறினார்.

கோபாலபுரத்திலிருந்து ஜனாதிபதியை தேர்வு செய்தார். அதேபோன்று இந்தியாவின் தலைமைப் பொறுப்பை கோபாலபுரம் ஏற்கும் நிலைமை வந்துள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் - மல்லிகார்ஜூன கார்கே

ABOUT THE AUTHOR

...view details