சென்னை:கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி ஜேவியர் மட்டம் பகுதியில் கடந்த 4ஆம் தேதி வசந்த் என்பவரது 4 வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுத்தை ஒன்று குழந்தையைத் தாக்கி உள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு பின்தொடர்ந்து, சிறுத்தையை விரட்டி சிறுமியை மீட்டனர். பின்னர், பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுமி நான்சி உயிரிழந்தார். மேலும், இதேபோல் கடந்த மாதம் 3 பெண்கள், சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட்ட சரிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில், சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.