தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரசால் சட்டமன்றத்தை ஒத்திவைக்கத்தேவையில்லை: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்! - சட்டமன்றக் கூட்டத்தொடர்

சென்னை: கரோனா வைரஸ் காரணமாக சட்டமன்றக் கூட்டத்தொடரை தள்ளிவைக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

cm-edapadi-palanisamy-and-oppositin-leader-stalin-debate-about-corona-virus
cm-edapadi-palanisamy-and-oppositin-leader-stalin-debate-about-corona-virus

By

Published : Mar 20, 2020, 2:52 PM IST

Updated : Mar 20, 2020, 3:01 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால் சட்டமன்ற கூட்டத்தொடரை தள்ளி வைக்கவேண்டும் என்று நேரம் இல்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அதில், ''கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. வருகின்ற ஞாயிறு காலை முதல் இரவு வரை யாரும் வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சட்டிஸ்கர், உத்தர்காண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே சட்டமன்றத்தை ஒத்தி வைத்துள்ளனர். தனிமையை மக்களிடம் வலியுறுத்தும் நாமே, இங்கே கூட்டமாக இருப்பது சரியா? என நேரம் இல்லா நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், ''1 மணிக்கு இது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வு கூட்டம் உள்ளது'' என தெரிவித்தார்.

மீண்டும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், '' அமைச்சர் ஒருவர் வீட்டின் முன்பு (நான் பெயர் சொல்ல விரும்பவில்லை) தன்னை யாரும் பார்க்க வீட்டிற்கு வர வேண்டாம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளார். கரோனா குறித்த அச்சம் அமைச்சருக்கும் உள்ளது. கரோனா நெருக்கடி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் மக்கள் மத்தியில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக தான் மக்கள் அனைவரையும் தேர்வு செய்துள்ளனர். தற்போது மக்கள் பணி செய்ய தொகுதிக்கு செல்ல வேண்டும்.

கடைகள், திரையரங்கம், சிறு வணிகம் என ஏராளமானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் அளவுகோல் உள்ளதா? நேற்று முதல்வர் தெரிவித்தபடி சிறுகுறு தொழில்களுக்கு பாதிப்பு இல்லை என கூறியுள்ளார். ஆனால் அன்றாட காட்சிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நிலைகள் மோசமாக உள்ளது. அவர்களுக்கு கேரள மாநிலத்தில் ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கு எடுத்து சொல்வது போல் தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருள்கள் கொண்டு செல்ல வேண்டும்'' என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ''கரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இதுவரை 4 முறை ஆலோசனை கூட்டங்களை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புக் குழு அமைத்து துரிதமாக செயல்பட்டு வருகிறது.

மார்ச் 31ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரி, ஆன்மீக தலங்கள், பெரும் ஜவுளி கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுத்து வருகிறோம். இதுவரை மூன்று பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

பிரதமர் வெளியிட்ட 9 அம்ச நோய்த்தடுப்பு முறைகளை தமிழ்நாடு அரசு மிக கவனமாக கடைபிடித்து வருகிறது. கரோனா வைரஸ் தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைத் துறையில் இருந்து 60 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நடந்து வருவதால் தலைமை செயலகத்திற்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்றம் நடைபெற்றால்தான், சூழ்நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்ல முடியும். மக்கள் பணி செய்ய தான் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். எனவே சட்டப்பேரவையை ஒத்திவைக்கத் தேவையில்லை'' என ஸ்டாலினுக்கு பதிலளித்தார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் பழனிசாமிக்கு கரோனா கண்டறிதல் சோதனை

Last Updated : Mar 20, 2020, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details