சென்னை: மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தற்போது மழை அதிகமாகவுள்ள காரணத்தால், அமைச்சர்களை அம்மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளதாக, முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது," கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ‘நிவர்’ மற்றும் ‘புரவி’ புயல்களால் ஏற்பட்ட கனமழை காரணமாக, வேளாண், தோட்டக்கலை பயிர்கள் 3.10 லட்சம் ஹெக்டேர் அளவில் பாதிக்கப்பட்டன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, கடந்த 2 ஆம் தேதி மாநில பேரிடர் நிவாரண விதிமுறையின்கீழ் வழங்கப்படும் நிவாரணத்தொகைக்கும் அதிகமான தொகையை அரசு நிர்ணயித்து, ரூபாய் 565.46 கோடியை அறிவித்தது.
இந்த நிவாரணத்தில், இதுவரை 487 கோடி ரூபாய் சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், நடப்பு ஜனவரி மாதத்தில் இதுவரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவான 10.2 மில்லிமீட்டருக்கு இதுவரை மிக அதிகமாக 108.7 மில்லிமீட்டர் வரை பெய்துள்ளது.