கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில், மக்கள் தங்களது கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் தண்ணீரை மட்டும் விநியோகம் செய்கிறது. அதனால், கொரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் மூன்று மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய குடிநீர் வாரியத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
பள்ளி மாணவ, மாணவிகள் கைகளை சுத்தப்படுத்த தேவையான தண்ணீர், கிருமி நாசினிகள் வழங்கப்படவில்லை என மனுவில் குற்றஞ்சாட்டியிருந்த அவர், கிருமி நாசினிகளை உடனடியாக மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, சென்னையில் நெருக்கமான தெருக்களில் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் டாஸ்மாக் கடைகள்,பார்களால் கொரோனா பரவுவதற்கு 90 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
அதில், கொரோனா வைரஸ் பாதித்து பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக மத்திய அரசு அறிவித்துள்ள 4 லட்சம் ரூபாயை உயர்த்தி 10 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, ஒரு வாரத்துக்குள் இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட வழக்கை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை