சென்னையில் கரோனா வைரஸ் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது. இருப்பினும் குணமடைந்தவரின் சதவீதமும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த் தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மே 8ஆம் தேதி முதல் நேற்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 49 ஆயிரத்து 595 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 25 லட்சத்து 70 ஆயிரத்து 486 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவ முகாம்களில் மூலம் கரோனா பாதித்த 23 ஆயிரத்து 683 நபர்களை மாநகராட்சி கண்டறிந்துள்ளது.