சென்னை:மெட்ராஸில் இருந்து, சென்னை என்று பெயர் மாற்றப்பட்ட காலத்தில் இருந்து சென்னை நகரமானது பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சிங்கார சென்னையாக பிறப்பெடுத்து, அடுத்து அடுத்து நாட்களில் சென்னை ஆனது, அதன் வளர்ச்சிகளும், சீரமைப்பு பணிகள் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், பூங்காக்கள், ஏரிப்பூங்கா, சுற்றுச்சுழல் பூங்கா, புதிய மேம்பாலங்கள், மாநகராட்சி பள்ளிகளில் கல்வியின் தரம் என பல வளர்ச்சிகள் அடைந்தது. சென்னையானது வளர்ச்சிகள் அடைய அடைய இந்திய மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் அதிகளவில் குடிபெயர்ந்தார்கள். அதற்கு ஏற்ப சென்னையின் மாநகராட்சியின் பரப்பளவும் விரிந்து கொண்டே சென்றது.
பரப்பளவு விரிந்ததால், சென்னைக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சிங்கார சென்னை 2.0 மற்றும் ஸ்மார்ட் சிட்டி, சிட்டிஸ் உள்ளிட்ட பல திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிகள் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பூங்காவை சீரமைத்தல், குளங்கள், ஏரிகள், பாலங்களில் தொங்கும் தோட்டம், நடைபாதை சீரமைத்தல். மேலும் சைக்கிள்களுக்கு என்று முக்கிய வீதிகளில் தனி லேண், சாலை விளக்குகள், மேம்பாலத் தூண்களில் ஓவியங்கள், மத்திய சதுக்கம், நகர்புற சதுக்கம் என்று பல்வேறு திட்டத்தின் கீழ் மேம்பாடு பணிகள் நடைபெற்றது.
கால் டூ ஆக்ஷன் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் தூய்மை பணி அதேப்போல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க பல்வேறு அரசு அமைப்புகள் ஆய்வு நடத்தியும், பாலங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து வருகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA - Chennai Metropolitan Development Authority), மெட்ரோ ரயில் நிறுவனம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட மாநில அரசு துறைகள் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டு உள்ளன.
இப்படி பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றாலும், தூய்மை நகரமாக வைத்துக் கொள்ள சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. அதில் குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் சேகரிக்கும் குப்பைகளை பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் பையோ மைனிங்க் முறையில் கரியமில வாயு உமிழ்வு தடுக்கப்படுகிறது. ஆனால் சென்னையின் தெருக்களில் குப்பை தான் இருந்து வருகிறது.
இதற்காக சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களிலும், கால் டூ ஆக்ஷன் திட்டம் (Call to Action) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சென்னையில் தற்போது தீவிர தூய்மை பணி நடைபெற்று வருகிறது. கால் டூ ஆக்ஷன் திட்டம் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கால் டூ ஆக்ஷன் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் தூய்மை பணி மேலும் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள், நீர் நிலைகளின் ஓரங்களில் உள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பயன்பாடற்று கைவிடப்பட்ட வாகனங்கள் ஆகியவை அகற்றப்பட்டு, அவ்விடத்தில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகைப் மருந்து அடித்தல் போன்ற சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சென்னையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கால் டூ ஆக்ஷன் திட்டம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் நடவடிக்கையாக டி.என்.இ.பி. லிங்க் சாலை, தெற்கு கூவம் சாலை போன்ற இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில், தீவிர தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
கட்டிடக் கழிவுகள் மற்றும் குப்பைகள், நீர்நிலைகளின் ஓரங்களில் காணப்படும் குப்பைகள், கைவிடப்பட்ட வாகனங்கள் என 150 டன் குப்பைக் கழிவுகள் காணப்பட்டன. இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தினமும் கள ஆய்வில் இருக்கிறார்.
சில சமயம் அவரே, தூய்மை பணி செய்கிறார். தூய்மையான சென்னைக்காக, சென்னை மாநகராட்சியில் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரி வரை அனைவரும் தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையில் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள், நீர் நிலைகளின் ஓரங்களில் உள்ள கழிவுகளை அகற்றுதல், பொதுக் கழிப்பிடத்தை சுத்தம் செய்தல், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல், கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.
கால் டூ ஆக்ஷன் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் தூய்மை பணி சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று மக்கும், மக்காத குப்பை எனப் பிரித்து பெறப்படுகிறது. மேலும் கடைகள், வணிக வளாகங்களில் மக்கும், மக்காத குப்பையாகப் பிரித்து சேகரிக்க வசதியாக, பச்சை மற்றும் நீல நிறத்தில் குப்பைத் தொட்டிகளை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி சார்பில் முக்கியப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் சேகரமாகும் குப்பைகள், லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதுமட்டுமின்றி கழிவுகள் மற்றும் குப்பைகள், நீர்நிலைகளின் ஓரங்களில் காணப்படும் குப்பைகள், கைவிடப்பட்ட வாகனங்கள் என 1000 டன் குப்பைக் கழிவுகள் கண்டெறியப்படுள்ளன. இதனை அகற்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை சுத்தம் செய்வதற்கும், சென்னை நகரை தூய்மையான நகராக மாற்றுவதற்கும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்டநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக 1038 வாகனங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. தற்பொழுது ஆங்காங்கே வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும் சென்னையில், வாகனங்கள் நிறுத்துவதற்காக பன்னடுக்கு வாகன நிறுத்த அமைப்பது தொடர்பாக, முதல் கட்ட பணிகள் அலுவலகம் ரீதியாக நடைபெற்று வருகிறது. அதேப்போல் மயான பூமிகளில் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில், சென்னை தூய்மை நகரமாக மாறும்” என்றார்.
மேலும் சென்னையில், தூய்மை பணி நடைபெற்றாலும், குப்பைகள் இருப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “மாநகராட்சியை மட்டும், குறை சொல்வது தவறு, சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது, மக்களின் பங்கு ஆகும். ஒரு நகரத்தை சுத்தமாக வைத்திருப்பது மக்களின் கடமை ஆகும். மேலும் மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். மக்களின் வரி பணத்தில் தான் அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மக்கள் தூய்மையாக வைக்க உதவினால், தூய்மைக்காக செலவிடும் தொகையானது வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு உதவ வாய்ப்பு இருக்கிறது. மேலும் 30 சதவீத மக்கள் செய்யும் தவறால் மொத்த மாநகரமும் பாதித்துக் கொண்டிருக்கிறது”. என்றுக் கூறினார்.
இதையும் படிங்க:சென்னை - கோலாலம்பூர் இடையே கூடுதல் விமான சேவை தொடக்கம்! பயணிகள் மகிழ்ச்சி!