சிட்டி யூனியன் வங்கியின் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வங்கியின் ஒட்டுமொத்த வணிகம் 11 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. நிகர லாபம் 8 விழுக்காடு அதிகரித்து 192 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் பிரதான வருவாயான வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 2 விழுக்காடு வளர்ச்சியடைந்து 427 கோடி ரூபாயாக உள்ளது.
வங்கியின் மற்ற வருவாய் 19 விழுக்காடு அதிகரித்துள்ளது. வங்கியின் டெபாசிட்டுகளும் 12 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வங்கியின் நிகர லாபம் 13 விழுக்காடு அதிகரித்து 571 கோடி ரூபாயாக உள்ளது. சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வாராக்கடன் 3.50 விழுக்காடாகவும் நிகர வாராக்கடன் 1.95 விழுக்காடாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாபத்திலிருந்து 65 விழுக்காட்டினை வாராக்கடன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காமக்கோடி செய்தியாளர் சந்திப்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிட்டி யூனியன் வங்கி தலைமைச் செயல் அதிகாரி காமக்கோடி, ”தற்போது 650 வங்கி கிளைகள் உள்ள நிலையில் அடுத்த ஆண்டுக்குள் 50 புதிய கிளைகள் திறக்கப்படவுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சூழல் காரணமாக எங்களது வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிட்டி யூனியன் வங்கி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் கொடுத்த நிலையில் அவை தற்போது பிரச்னைகளைச் சந்தித்துவருவதால் வங்கியின் வருவாய் பெரிய அளவுக்கு முன்னேற்றம் அடையவில்லை” எனத் தெரிவித்தார்.
பின்னர், சிட்டி யூனியன் வங்கியின் செயற்கை நுண்ணறிவு கொண்ட சியூபி ஆல் இன் ஒன் என்ற செயலி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாக வாய்மொழி உத்தரவு மூலமாகப் பணப்பரிவர்த்தனை, கணக்கிலுள்ள பாக்கியை அறிதல், சந்தேகங்களுக்கு விடைபெறுதல் போன்ற பல்வேறு சேவைகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் செயல்படுகிறது.