தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ், சிங்கிள் ஸ்கீரின் திரையரங்கங்கள் என மொத்தம் 1,112 திரையரங்கங்கள் உள்ளன. தமிழ் திரையுலகில் ஆண்டொன்றுக்கு 250க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அதில் 100 பெரிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் உள்பட சுமாராக 210 படங்கள் திரையரங்கில் வெளியாகும். பெரும் முயற்சிக்கு பின்னர் சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் சுமார் 100 திரைப்படங்கள் வெளியாகின்றன. மீதமுள்ள படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் முடங்கும் நிலை உள்ளது.
மேற்குறிப்பிட்டது, கரோனா தொற்றுக்கு முன்பு இருந்தநிலை, கடந்த எட்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் சுமார் 60-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட முடியாமல் தேங்கி கிடக்கின்றன.
இந்நிலையில் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்கு இயங்கினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியமிடம் கேட்டோம்.
இந்த நடவடிக்கையால் வசூல் நிச்சயமாக மிகக் குறைவாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்த அவர், பொதுமக்கள் நலன் கருதி அதற்கு ஒத்துழைக்கப்பதாகத் தெரிவித்தார். இன்னும் மூன்று மாதங்கள் இந்தச் சூழல் தொடர வாய்ப்புள்ளதால், திரையரங்கு திறந்ததும் முதலில் சிறிய படங்களைப் பதினைந்து அல்லது இருபது நாள்களுக்கு திரையிடுவோம்.
பின்னர் மக்களின் வருகைப் பொறுத்து பெரிய படங்களை ரிலீஸ் செய்யவோம் எனத் தெரிவிக்கும் திருப்பூர் சுப்பிரமணியம், பார்வையாளர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு வழிமுறைகளும் செய்யத் தயாராக இருப்பதாவும் தெரிவித்தார்.
என்னென்ன நடவடிக்கைகள்?
- வெப்பநிலை பரிசோதனை
- இருக்கையில் இடைவெளி (ஒரு சீட் விட்டு ஒரு சீட்)
- குடும்பத்தோடு வரும் பார்வையாளர்களுக்கு ஒரே வரிசையில் அமர வைக்க ஏற்பாடு
- முகக்கவசம் கட்டாயம். அணியாதவர்களுக்கு திரையரங்கில் கொடுக்கவும் ஏற்பாடு
- திரையரங்கில் பணிபுரியும் பணியாளர்கள் முகக் கவசம், கையுறை கட்டாயம்
- திரையரங்கில் சானிடைசர் வைக்கப்படும்
- ஒருமுறைக் காட்சிக்கு இருமுறை கழிவறைகளை சுத்தப்படுத்த திட்டம்
- திரையரங்கை விட்டு வெளியேறும்போது தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள், 50 விழுக்காடு இருக்கைகள் என மெனக்கெட்டு திரையரங்குகளைத் திறக்கும் உரிமையாளர்களுக்கு என்னமாதிரியான சிக்கல்கள் உருவாகும் என்பது குறித்து தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் கௌரவத் தலைவர் அபிராமி ராமநாதனிடம் கேட்க தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.
அவர்,” திரையரங்கினுள் 50 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிப்பதில் எங்களுக்கு சிக்கல்களும், இழப்பீடும் இல்லை. கரோனா பாதிப்பு இல்லாத சாதாரண நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே 75 முதல் 100 விழுக்காட்டினர் திரையரங்கிற்கு வருகை தந்தனர்.
ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற வார நாள்களில் 30 விழுக்காடு மக்கள் மட்டுமே திரையரங்கிற்கு வந்தனர். ஆகையால், கரோனா தொற்று இல்லாத காலத்திலேயே திரையரங்கு 70 விழுக்காடு இருக்கைகள் காலியாகவே இருந்தன. இப்போது 50 விழுக்காடு பார்வையாளர்கள் என்பது ஞாயிற்றுக்கிழமை வசூலை மட்டுமே பெருமளவில் பாதிக்கும்.
மற்ற வார நாள்களில் எப்போதும் போல் மக்கள் வருகை 30 முதல் 50 விழுக்காடு இருந்தாலே எங்களுக்கு போதுமான ஒன்று. சினிமாத்துறை 50 விழுக்காடு மக்கள் வருகையை வைத்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது.