சென்னை: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், கல்லறைத் தோட்டத்தில் இறந்த தங்களது உறவினர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து புதிய வண்ணங்கள் தீட்டப்பட்டு அதில், மறைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
மேலும், இறந்தவர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். மேலும், சென்னை பட்டினப்பாக்கம், கீழ்பாக்கம், அம்பத்தூர், சென்ட்ரல் எதிரில் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறை, கத்திப்பார கல்லறை எனச் சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறைகள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதற்கு முன்னதாக, கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்து, லுத்தரன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் கல்லறை திருநாளை இன்று அனுசரித்தனர். மேலும், இதில், பட்டினப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில், இறந்தவர்களின் கல்லறையில், மலர்களை வைத்து கன்னியாஸ்திரீகள் அஞ்சலி செலுத்தினார்கள். இதையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டங்கள் கடந்த சில நாட்களாகத் தூய்மைப் படுத்தும் பணி நடந்தது. கல்லறைகளைச் சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவும், போரில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் கல்லறைத் திருநாள் வழிபாடு நடைபெற்றது. இந்த பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களான, தஞ்சை, திருவாரூர், குடந்தை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கோவை, ஊட்டி, ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களைச் சார்ந்த கல்லறைத் தோட்டங்களிலும், பிற கல்லறைகளிலும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பல்வேறு பகுதிகளில், இதற்கான சிறப்பு வழிப்பாட்டுகளும், நடைபெற்றன.
இது குறித்து பட்டினப்பாக்கம் கல்லறைக்கு வந்த ஒரு குடும்பத்தினர் கூறுகையில், "கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தவரை உடலை விட்டு உயிர் பிரிவது மட்டும் முடிவு கிடையாது. அதுவே தொடக்கமாகக் கருதப்படுகிறது என்றும், அழிவில்லாமல் வாழ்வது ஆன்மா அதனைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆன்மாவிற்கு போதும் அழிவு கிடையாது என்பதை உணர்த்துவதற்காகவே மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்ததாக கூறப்படுகிறது. இறப்புக்குப் பின்னர் இறைவனிடம் அமைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே முக்கியமாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த கல்லறை திருநாள் அன்று இறந்தவர்களின் கல்லறைக்குச் சென்று அதனைச் சுத்தப்படுத்தி மலர்களைத் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி ஜபம் செய்வது வழக்கமாகும். மேலும் எப்போதும் அவர்கள் நினைவில் இருப்பார்கள்" எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துச் சென்றனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!