கோவை சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் வைத்து கும்பியாக மாற்ற உத்தரவிடகோரி முரளிதரன் என்பவரும், சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கேட்டு அருண் பிரசன்னா என்பவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது, காட்டு யானை சின்னத்தம்பியை தொடர்ந்து கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதியில் வலம்வர அனுமதித்தால், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
யானைகள் முகாமிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள யானையை பிடிப்பது தான் தீர்வு என்று யானைகள் நிபுணர் அஜய் தேசாய் தெரிவிக்கிறார். அஜய் தேசாய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சின்னத்தம்பி யானையை அடுத்து என்ன செய்யலாம்? என விளக்கமளிக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிட்டார்.
இதனை ஏற்ற நீதிமன்றம், வன விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடம் இருந்து வன விலங்குகளுக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சின்னதம்பி யானையை அடுத்து என்ன செய்வது? என்பது குறித்து யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.