சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கை பாதிக்கப்பட்ட குழுந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒன்றரை வயது குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அதேபோல் இந்த சிகிச்சையில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது ஒன்றரை வயது மகன் முகமது மகிருக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைகாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதித்து உள்ளனர்.
அங்கு, குழந்தையின் வலது கையில் ட்ரிப்ஸ் போட்டுள்ளனர். மேலும், அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். ட்ரீப்ஸ் போடப்பட்ட இடத்தில் கறுப்பாக மாறியதாக கூறப்படுகிறது. பின், வலதுகை முட்டி பகுதி வரை செயலிழந்ததுடன், கறுப்பாகவும் மாறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் வலது கையை அகற்ற வேண்டும் என கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் வலது கையை முழுவதுமாக அகற்றி உள்ளனர்.
குழந்தையின் தந்தை தஸ்தகீர் கூறும்போது, "குழந்தைக்கு ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளித்து வருகிறோம். ராஜீவ் காந்தி மருத்துவமனையில், ட்ரிப்ஸ் போடப்பட்ட பிறகு, கை கறுப்பாக மாறியது. மருத்துவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கையின் நிலை மோசமானதால், மருத்துவர் ஆயின்மென்ட் எழுதிக் கொடுத்தார்.
அது,மருத்துவமனையில் இல்லை என்றதால் வெளியே இருந்து வாங்கி வந்து பயன்படுத்தியும் பயன் இல்லை. தற்போது கையை அகற்ற வேண்டும் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கையை அகற்றி உள்ளனர்" என தெரிவித்தார்.
குழந்தையின் தாய் அஜிஷா கூறும்போது, "சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்திருந்தோம். அங்கு கடந்த வியாழக்கிழமை குழந்தையின் வலது கையில் மருந்து செலுத்துவதற்காக போடப்பட்ட ஊசி (டிரிப்ஸ்) செலுத்திய போது குழந்தையின் கையின் விரல் பகுதியில் சிகப்பு நிறமாக மாறியது.
இது குறித்து அங்கு இருந்த செவிலியரிடம் தெரிவித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து குழந்தையின் கையிலேயே அந்த ஊசி இருந்தது (டிரிப்ஸ் ) பலமுறை வலியுறுத்தியும் அதனை அகற்றவில்லை. தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்ததால் வேறு வழி இல்லாமல் வேறு ஒரு செவிலியரிடம் தெரிவித்து அந்த ஊசியை அகற்றினேன்.
அதற்குள்ளாக குழந்தையின் பாதி கை அளவுக்கு சிகப்பு நிறமாக மாறி கை அசைவின்றி இருந்தது. அதன் பிறகு குழந்தையின் கை கருப்பு நிறமாக மாறி அசைவின்றி இருந்தது குறித்து இரவு மருத்துவரிடம் தெரிவித்தேன். அப்போதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆயின்மென்ட் போட்டால் சரியாகிவிடும் என்று தெரிவித்தனர்.
பின்னர் சனிக்கிழமை வரை அங்கேயே இருந்தும் எனது மகனின் கையில் அசைவு இல்லாததால் மீண்டும் மருத்துவரிடம் தெரிவித்தேன். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்த போது தான் எனது மகளின் கை அழுகிவிட்டது என தெரிவித்தனர். உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் இல்லாவிட்டால் குழந்தையை காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்தனர்.
ஆனால் எனது குழந்தையின் கை அழுகியதற்கு யார் பொறுப்பு, யார் காரணம் என்று சொல்லவில்லை. குழந்தைக்கு ஏற்கனவே இருந்த பாதிப்பு காரணமாக இப்படி ஏற்பட்டிருக்கலாம், அப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் குழந்தைக்கு கையில் செலுத்தப்பட்ட ஊசியினால் பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டு கை அழுகி இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.