சென்னை:எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், நாளை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,‘’குழந்தை விவகாரத்தில் கவனக் குறைவு என்று நீங்களே முடிவு பண்ணக்கூடாது. இந்தக் குழந்தை பிறக்கும் பொழுது 32 வாரத்தில் பிறந்துள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன.
ரத்த ஓட்டம் குறைவாக சென்றதால், கை தளர்ச்சி ஏற்பட்டு ரத்த உறைதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துள்ளனர். இந்த தகவல் தெரிந்தவுடன் பெற்றோரை அழைத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் தெளிவாக விளக்கி கூறியுள்ளார். பெற்றோர் வைத்த சந்தேகத்தை நாம் புறந்தள்ளி விட முடியாது. அதனால் நாங்களே உடனடியாக கல்லூரி முதல்வரை வைத்து சம்பந்தப்பட்ட மருத்துவ வல்லுனர்களுடன் விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளோம்.
தற்போது வரை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மாலை அல்லது நாளை அதன் விசாரணை அறிக்கை வந்துவிடும். வந்துவிட்டால் அதில் ஏதாவது கவனக் குறைவு கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை விவகாரத்தில் எல்லோரும் வாய்க்கு வந்ததை பேசுவது சரியாக இருக்காது.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர், ஒரு முதலமைச்சராகவே இருந்தவர்.சேலத்தில் குழந்தை இறந்துவிட்டதாகவே பேசுகிறார். இதுபோன்று ஒரு துறையை கேவலப்படுத்துகின்ற வகையில் ஒரு மக்கள் சேவை ஆற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு மகத்தான துறைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் இதுபோன்ற செய்திகளை பரப்புவதை அன்பு கொண்டு தவித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் குழந்தை விவகாரத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் சொல்லலாம். கவன குறைவுகள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அந்த குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. தற்போது கூட இயற்கையாக இருக்க வேண்டிய எடையை விட பாதி அளவில் தான் உள்ளது.