சென்னை:நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் சற்றே குறைந்து வந்த நிலையில், தற்போது மூன்றாவது அலையின் சீற்றம் மெதுவாக தலை தூக்கத் தொடங்குகிறது.
கரோனா மூன்றாவது அலையில், நோயின் தாக்கம் அதிகளவில் குழந்தைகளுக்கு ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இவை அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நடவடிக்கைகள் தீவிரம்
இருப்பினும், மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் குழந்தைகளுக்காக தனி வார்டுகள் புதிய கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நவீன படுக்கைகள், வென்டிலேட்டர் கருவிகள், அதிவேக ஆக்ஸிஜன் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான கார்ட்டூன் வார்டு மேலும் இங்கு தாய்மார்கள் தங்கள் நோயுற்ற குழந்தைகளுக்கு பால் ஊட்டுபதற்கு ஏற்றார் போல், பிரத்யேகமான பாலுட்டும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
கார்ட்டூன் படங்கள்
இதுகுறித்து அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் ஜெயந்தி கூறியதாவது, 'கரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு வருமா என்பது உறுதியாக கூறப்படவில்லை.
ஆனாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, குழந்தைகளுக்கு அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவுகளை, நவீனக் கருவிகளைப் பொருத்தி அமைத்துள்ளோம். மேலும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக கார்ட்டூன் படங்களையும் பொருத்தி உள்ளோம். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்புகள் ஏற்படாத வகையில், பெற்றோர் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசியும் ஆராய்ச்சியில் உள்ளது' எனக் கூறினார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு: சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள அவலம்!