சென்னை:அறிவியல் மற்றும் கணக்கு ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்காதீர்கள் முடிந்தால் உங்கள் வகுப்பு நேரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள் என ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாநில அளிவில் முதல்முறையாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் குழந்தைகளின் கலை நடனத்துடன் இன்று(நவ.14) நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
குழந்தைகள் தினவிழாவை கொண்டாடும் வகையில் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், தொடக்கக்கல்வித் துறையில் மாவட்டத்திற்கு மூன்று சிறந்தப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 38 மாவட்டங்களில் உள்ள 114 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சான்றிதழ் பெற்ற குழந்தகளிடம் பேசினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தபடும் முதல் குழந்தைகள் தின விழா இது. மாணவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய உரிமைகளை தவறாமல் கொடுக்கும் அரசு தான் தமிழ்நாடு அரசு. நவீன இந்தியாவை உருவாக்கியவர் நேரு என்றால், நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேலும் கருணாநிதி முதலமைச்சராக இருந்தப்போது தான் பள்ளிக்கல்வித்துறை தனித்துறையாக, பிரிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டுகளிலேயே கணினிக்கென தனிப்பாட பிரிவை உருவாக்கிய பெருமையும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையேச் சேரும்.